search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல்"

    மடிப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் - மூவரசன் பேட்டை மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம ஆசாமிகள் நேற்று உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இந்த கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா வயரை துண்டித்து விட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது.

    இதன் பின்புறம் வல்ல விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள பாதாள விநாயகர் கோவிலில் நேற்று இரவு உண்டியலை உடைத்து கொள்ளயடிக்க முயற்சி நடந்தது. அப்போது, அபாயமணி ஒலித்தது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பாகூரில் கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் ரூபாய் நோட்டுகளை மட்டும் கொள்ளையடித்து கொண்டு சில்லரை காசுகளை வீசி சென்றனர்.

    பாகூர்:

    பாகூர் மார்க்கெட் தெருவில் 4 முனை சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தினமும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம். கடந்த 6 மாதத்துக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டது. அதன்பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவில் பூசாரி அப்பு பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூசாரி அப்பு பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் காணாமல் திடுக்கிட்டார். அந்த உண்டியல் கோவில் பின்னால் கிடந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சில்லரை காசுகள் சிதறி கிடந்தன.

    இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. வியாபாரிகளும், பொதுமக்களும் கோவிலுக்கு திரண்டு வந்து பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளானர்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்கு பின்புறமாக மதில் சுவர் ஏறி குதித்து உண்டியலை எடுத்து சென்று பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். மேலும் போலீஸ் நிலையமும் அருகிலேயே உள்ளது. அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிகரமாக கோவிலில் உள்ளே புகுந்து உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ணந்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரிச்சந்திரன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலை புதுப்பித்து கடந்த 6 மாதங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்,

    இந்த நிலையில் வழக்கம் போல பூஜையை முடித்து விட்டு கோவில் நடையை பூட்டி விட்டு பூசாரி சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலை திறக்க தர்மகர்த்தா வெங்கடாசலம் சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. பிறகு கோவிலை சுற்றி பார்த்த போது கோவிலின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் இரண்டு உண்டியல்களும் உடைந்து கிடப்பது தெரியவந்தது.

    உண்டியலில் இருந்த பணம் சுமார் ரூ. 50 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் மர்ம நபர்கள் கோவிலின் அருகே பூஜைகள் செய்து, கோழி பலியிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு ஊழியர் நகரில் பிரசித்தி பெற்ற ஓம்கார செல்வகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கதவை பூட்டிவிட்டு பூசாரி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், இந்த கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். அந்த உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    பின்னர் அந்த மர்ம நபர்கள், பக்கத்து தெருவான தந்தை பெரியார் நகருக்கு சென்று அங்கிருந்த மற்றொரு விநாயகர் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்துள்ளனர்.அந்த சமயத்தில் அந்த வழியாக பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் நேற்று காலை விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த 2 கோவில்களுக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் பக்தர் போல வந்த நபர் ஒருவர் அம்மன் சன்னதி கொடிமரம் முன்பு இருந்த உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை அட்டையில் பசை தடவி நூதன முறையில் திருடினார்.

    அவரை கோவில் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 770-ஐ போலீசார் பறிமுதல் செய்து கனகராஜை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இதேபோல நேற்றும் அதே உண்டியலில் ஒரு வாலிபர் பணம் திருடியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.

    அதன் விவரம் வருமாறு:-

    அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தின் கீழ் உள்ள உண்டியல் அருகே நேற்று காலை அடிக்கடி ஒரு நபர் வந்து காணிக்கை போடுவது போல் உண்டியல் உள்ளே இருந்து பணத்தை எடுத்தார். இதைப்பார்த்த கோவில் ஊழியர்கள் சந்தேகமடைந்து அவரை பிடித்து இணை ஆணையர் ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர். அவர் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பழனியப்பா காலனியை சேர்ந்த தினேஷ் (31) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தினேஷ் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு பக்தர் போல வந்து அம்மன் சன்னதி கொடிமர உண்டியல் ஓட்டையில் ஒரு பிளாஸ்டிக் அட்டையை மடித்து உள்ளே வைத்து விடுவார். உண்டியலுக்குள் பக்தர்கள் போடும் காணிக்கை உண்டியல் உள்ளே விழாமல் அந்த அட்டையில் சிக்கி இருக்கும். சிறிது நேரம் கழித்து தினேஷ் சென்று உண்டியலில் பணம் போடுவது போன்று அட்டையில் சிக்கி இருக்கும் பணத்தை எடுத்து விடுவார். இவர் அடிக்கடி வந்துள்ளார்.

    இவை அனைத்தும் கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இவர் உண்டியலில் திருடிய ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் 3 நாட்களாக ஒரே சட்டை அணிந்து வந்துள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கோவில் ஊழியர் முரளி திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

    கோவிலில் கடந்த சில நாட்களாக பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    புகழ்பெற்ற அண்ணாமலை கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் சிக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாலி பகுதியில் இன்ஸ் பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் 2 பேரும் சிறுவாலி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் பாம்புளியம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 32), மற்றும் அன்புத்தம்பி (23) என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் 2500 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    பெரணமல்லூர் அருகே கோவில்களில் உண்டியலை உடைத்து திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் ராமலிங்கம் சாமி கோவிலும், வெங்கடேசப்பட்டி கிராமத்தில் அனுமான் கோவிலும் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் கடந்த 10-ந் தேதி இரவு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், கன்னியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமணி கிராமத்தில் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) மற்றும் திருமணி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (18) என்பதும், ராமலிங்க சாமி கோவில், அனுமான் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    கறம்பக்குடி அருகே கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியில் பிரசித்தி பெற்ற காப்புமுனிக்கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள உண்டியலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் என பலரும் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் மழையூரில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 38) என்பதும், அவர் காப்புமுனிக் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர். இதையடுத்து முருகேசனை மழையூர் போலீசார் கைது செய்து, ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதையடுத்து நீதிபதி கலைநிலா, முருகேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் அழைத்து சென்று புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 
    மணவாளக்குறிச்சி அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    மணவாளக்குறிச்சி:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கருங்காலிவிளையில் சிவசுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் மாலையில் பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் ஆண்டுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த கொள்ளை குறித்து கோவில் பொருளாளர் ஈஸ்வர பாக்கியம், மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு காட்டன்மில் ரோட்டை அடுத்த ஜீவா நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. இந்த நிலையில் ராதாநகர் பகுதியில் உள்ள மறைவிடத்தில் 2 சிறுவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப் பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் தொட்டி மண்ணரையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மற்றொருவன் ஊத்துக்குளியை அடுத்த மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கறம்பக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் உள்ள மாடகாளி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு அடிக்கடி பக்தர்கள் கிடாவெட்டு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேலும் நேர்த்திக்கடனாக கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்க நகைகளையும் காணிக்கையாக செலுத்துவதும் உண்டு. இந்தநிலையில் நேற்று முன்தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பின்னர் இரவு வழக்கம்போல கோவில் பூசாரி கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், வடகாடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் திறக்கப்படாததால் பக்தர்கள் செலுத்திய பணத்தின் மதிப்பு பல ஆயிரக் கணக்கில் இருக்கும். மேலும் சென்ற ஆண்டும் கும்பாபிஷேகத்தின்போது கோவிலில் இருந்த மற்றொரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை தொடர்ந்து திருட்டுபோவது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர். 
    ×